ஸ்ரீ ரமணமகரிஷி

மலைமீதுள்ள கந்தாசிரமத்திலிருந்து மகர்ஷிகள் அடிக்கடி மலை அடிவாரத்திலுள்ள அன்னையின் சமாதிக்குப் போய் வருவது வழக்கம்.  ஒரு நாள் அங்கே சென்றவர் மலைக்குத் திரும்பவில்லை.  அது முதல் அங்கேயே தங்கலானார்.  அந்த இடமே இப்போதுள்ள ஆசிரமமாக விளங்குகிறது.

சுயேச்சையாக கந்தாசிரமத்தை விட்டு இங்கே வரவில்லை.  ஏதோ ஒன்று என்னை இங்கே கொண்டு வந்து இருத்தியது.  எல்லாம் திருவருள் என்றார் பகவான்.

இதன் பின் ஸ்ரீ ரமண மகர்ஷிகளின் உபதேசம் நாடெங்கும் பரவி, இந்தியாவுக்கு அப்பாலும் புகழ் பெறத் தொடங்கியது.  பகவான் இங்கே வந்தபோது மாத்ரு லிங்கத்தின் மேல் ஒரு கூரைக்கட்டிடமே இருந்தது.  பிறகு வேறு சில கூரைக்கட்டிடங்கள் ஏற்பட்டன.

மகர்ஷிகள் 20 ஆண்டுகட்கு மேல் வீற்றிருந்த பழைய ஹால் என்று இப்போது அழைக்கப்படும் மண்டபந்தான் முதன் முதலாக இங்கே ஏற்பட்ட செங்கல் கட்டிடம்.

1924 இல் திருடர்கள் ஆச்ரமத்தில் புகுந்து பக்தர்களையும் பகவானையும் பணத்திற்காக அடித்தனர்.  அத்திருடர்களை அடிக்க முன்வந்த பக்தர்கள் சிலரைப் பார்த்து சாந்த மூர்த்தியாம் பகவான் அவர்களைத் தடுத்தார்.  நாம் சாதுக்கள் அல்லவா? நமது தர்மத்தைக் கைவிடலாமா? நீ போய் அவர்களை அடித்தால் ஏதாவது உயிர் சேதம் ஏற்படலாம்.  அப்போது பழி யார் மீது விழும்? நம்மையன்றோ சாரும்? அவர்கள் தெரியாதவர்கள்.  அறியாமையில் மூழ்கியவர்கள்.  ஆனால் அறிந்த நாம் நமது தர்மத்தை கடைப்படிக்க வேண்டும்.  சில சமயங்களில் நாமே நாக்கைக் கடித்துக் கொள்கிறோம்.  அதற்காகப் பல்லை உடைத்து எறிந்து விடுகிறோமா? என்றார்.

திருடர்கள் கொடுமை நடந்து கொண்டிருந்த போது நோயுற்றிருந்த நாயின் மீதே பகவானின் முதல் கவனம் சென்றது.  பகவானின் கருணையையும் அன்பையும் விளக்க இது ஓர் உதாரணம்.  தினசரி வாழ்விலும் இப்படித்தான்.  நாய், பசு, அணில், குரங்கு போன்ற சகல ஜீவராசிகளையும் பகவான், மனிதர்களைப் போலவே பாவித்து நடத்துவார்.

புதிதாக வருகிறவர்களுக்கு இது ஒவ்வொரு சமயம் ஆச்சரியத்தை உண்டுபண்ணும்.   பசங்கள் என்று பகவான் சொல்வதைக் கேட்டு, யரோ சில சிறுவர்களைக் குறிப்பதாகப் பலர் ஏமாறுவது உண்டு.  ஆனால் அவர் குறிப்பது மானிடச் சிறுவர்களை அல்ல.  நாய், அணில், போன்ற குழந்தைகளைத் தான்.  எல்லா ஜீவராசிகளும் அவருக்கு சமமே.  மிருகங்களைக் கூட அவன், அவள் என்று உயர்திணையிலேயே குறிப்பிடுவார்.  ஆசிரமத்துக்குள் அவைகளை அவமரியாதையாகவோ அன்பின்றியோ நடத்துவதை பகவான் சகிக்க மாட்டார்.

அந்த உடல்களுக்குள்ளே எந்த எந்த ஆத்மாக்கள் இருக்கின்றனவோ!  பூர்வ கர்மத்தின் எப்பாகத்தை முடிப்பதற்காக நம்மை அவை அடுத்திருக்கின்றனவோ!   யாருக்குத் தெரியும்? என்று கூறுவார்.

இலக்கியங்கள்

கடந்த பல ஆண்டுகளில் பகவானைப் பற்றி வெளிவந்துள்ள நூல்கள் பல.  முதன் முதலில் மகர்ஷிகளின் சரித்திரத்தைச் சிறந்த முறையில் எழுதியவர் நரசிம்ம சுவாமி யாவார்.  இவர் பூர்வாசிரமத்தில் சேலம் வக்கீல், பி.வி. நரசிம்ம ஐயர் என்று கீர்த்தி பெற்றவர்.  பின் உலக வாழ்க்கையிலிருந்து விலகி ரமணாசிரமத்தை அடைந்து ஒருகுகையில் வாசங்கொண்டு ‘ஸெல்ப் ரியலைஸேஷன்’ என்னும் புத்தகத்தின் மூலம் வெளியுலகுக்கு பகவானின் பூர்ண மகிமையை உணர வழி அளித்தார்.  இந்த ஆங்கில நூல் பல பதிப்புகள் அச்சிடப்பெற்றுள்ளன.

‘ஸ்ரீ ரமண விஜயம்’ என்ற தலைப்பில் சுத்தானந்த பாரதி அவர்கள் தமிழில் விரிவான சரித்திரம் ஒன்று எழுதியுள்ளார்.  சமீபத்தில் தெலுங்கு, ந்தி, குஜராத்தி, வங்காளம், மலையாளம், ஸம்ஸ்க்ருதம், கன்னடம் இன்னும் பல மொழிகளிலும் ஸ்ரீ பகவானது சரித்திரமும் உபதேசங்களும் பல அன்பர்களால் எழுதிப் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன்.

ஸ்ரீ மஹர்ஷி என்ற நூல் சென்னை வாரப்பத்திரிகை, ‘சண்டேடைம்ஸ்’ ஆசிரியராக இருந்து காலஞ் சென்ற திரு. காமத் அவர்களின் முயற்சியால் ஆங்கிலத்தில் வெளிவந்தது.  பின்னர் அவரே அதை ந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் எழுதுவித்து வெளியிட்டார்.  பிறகு மலையாளத்திலும் குஜராத்தியிலும் இது வெளியாயிற்று.

வெளிநாட்டாருக்கு மகர்ஷிகளின் மகிமையை முதன் முதல் உணர்த்தியது பால் பிரன்டனின் ‘எ ஸெர்ச் இன் ஸீக்ரெட் இந்தியரு என்னும் நூல்.  மேல் நாட்டார் பலர் இந்நூலால் மகர்ஷிகளை நாடிவரத் தொடங்கினர்.

ஸ்ரீ மகரிஷிகளைப் பற்றி ஆங்கில மொழியில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  பல நூல்களின் வாயிலாக ஸ்ரீ பகவானின் வாழ்வும் வாக்கும் லண்டன் ரைடர் அண்டு கோ.  வினால் வெளியிடப்பட்டு வருகின்றது.  அவை பலநாட்டு அன்பர்களால் ஆர்வத்துடன் படிக்கப்படுவதுடன், அருணாசலரமண அருட்காந்தத்தால்  அவர்கள் ஈர்க்கப்படுவதற்கும் காரணமாயுள்ளது.

ஸ்ரீ பகவானின் உபதேசங்களைப் படித்துப் பயில விரும்புவோர், உருவில் சிறியதேயாயினும், கருத்தில் மிகுந்த ‘நான் யார்?’ ‘ஸ்ரீ மகரிஷிகளுடன் உரையாடல்’ முதலிய அரிய பெரிய நூல்களைப் படித்து பேரருள் எய்தலாம்.  இந்நூல்களின் பயனாக, வெளிநாட்டார் பலர் ஆசிரமத்துக்கு வரத்தொடங்கினர்.

மகர்ஷிகளின் சந்நிதி

ஞானப்பசி கொண்டோரையும் முத்திக்கு முயல்வோரையும் ஏதோ ஓர் அதிசய சக்தி ஸ்ரீ பகவான் முன்னிலைக்கு இழுக்கிறது.  அவர்கள் பகவான் சந்நிதியில் பரமசுகத்தை அனுபவிக்கின்றனர்.  இப்படி ஈர்க்கப்பட்டவரில் ஒருவர் ஓர் அமெரிக்க மாது; இவ்வம்மையார் பல நூல்களை இயற்றியவர்.  பகவத்சந்நிதியில் இரண்டு மணிநேரம் தங்கி விடை பெற்றுச் சென்றார்.  போவதற்கு முன் பகவானை நோக்கி.  “என் தேசத்தை விட்டு வெகு தூரம் வந்தது தங்களை தரிசித்து என் மனப் பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டுத்தான்.  சந்நிதியில் சிறிது நேரமே தங்கினேன்  ஆனாலும் பரமானந்தம் அடைந்தேன்” என்றார்.

ஸ்ரீ மகர்ஷிகள் எளிய வாழ்க்கைக்கு ஓர் சிறந்த உதாரணம் ஆவர்.  முதன் முதல் திருவண்ணாமலையை அடைந்து அன்று அணிந்தமர்ந்த கெளபீனமே இன்னும் அவருக்கு ஆடையாக இருந்து வந்தது.  தமக்கு புஷ்பமாலை சூட்டுதைக் கூட கடைசிவரை கண்டிப்பாக மறுத்து விடுவார்.  ஆகவே, படாடோபங்களை ஆசிரமத்தில் காண முடியாது.  பகவத் கைங்கரியத்துக்காகப் பல பக்தர்கள் பணம் கொடுத்து உதவி வருகின்றனர்.  ஆனால் மகர்ஷிகள் பணத்தைக் கையாலும் தொடுவதில்லை.  ஆரம்பத்திலிருந்தே லெளகிக காரியங்களை மற்றவர்களே கவனித்து வரலாயினர்.

உடல் நோயும் மஹா நிர்வாணமும்

தமது சாந்நித்தியத்தாலும் சொல்லாலும் நோக்காலும், ஒவ்வோர் அசைவாலும் அடுத்தோர் துன்பத்தையகற்றி, அமைதியையும் மெய்யுணர்வையும் அருளிவந்த அண்ணல், தமது அவதார லட்சியம் நிறைவானதென்று ஸ்தூல சரீரத்தை விடுத்து விஸ்வ ரூபத்தில் ஒடுங்கக் கருதினார் போலும்.

ஸ்ரீ பகவானது இடது முழங்கைப் புயத்தில் 1949-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே தொண்டர்கள் கவனத்தைக் கவர்ந்து கிளம்பிய ஒரு சிறிய தசை வளர்ச்சி கொடிய புற்றாய்ப் பெரிதாகி, நான்கு சத்திர சிகிச்சைகளும் ரேடியம் சிகிச்சையும் இதர வைத்தியங்களும் செய்யப் பெற்றும் எதற்கும் அடங்காது, மென்மேலுமோங்கி அண்ணலின் புனிதத் திருமேனியை, அன்பர்கள் நைந்து வாட, ஓராண்டுக்கு மேல் வாட்டி முடிவில் வதைத்துவிட்டது.

நோயாளரை இடைவிடாது துடித்துக் கதறச் செய்யும் கொடிய வலியுடைய இப்புற்று (சர்கோமா) நோயினூடே, ஸ்ரீ பகவானது தெய்வீக இயல்பின் மாண்பும் அக மலர்ச்சியும் முகவிலாசமும் குருடருங் கண்டு போற்றிப் பணியுமாறு விளங்கின; எப்பொழுதும் போலவே, பகவானது அருட்செயல்கள் இயல்பாய் நிகழ்ந்து வந்தன.

1950 ஏப்ரல் மீ 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை, பக்தர் பெருந்திரள் அணிவகுப்பில் பகவானைத் தரிசித்து முடிந்து பின்னர், அந்திப் பொழுதில், தமதுடலை நிமிர்த்தி உட்காரவைக்கும் படி பணி செய்வோரை பகவான் கேட்டுக் கொண்டார்.  அவர்கள் அவ்வாறே செய்தனர்.  டாக்டர்கள் பிராணவாயுவை பகவானது நாசிப்பக்கம் காட்டத் தொடங்கவும், திறந்த வலக்கையின் குறிப்பால், பகவான் அதை நிறுத்துமாறு பணித்தார்.

உடல் போர்த்திலங்குங்காலே வடிவும் வரையுமிலா மோன ஞானமாய்த் திகழ்ந்த எம்பெருமானுக்கு, உடலனின் இருப்பாலும் ஒழிவாலும் கூடுதல் குறைவு ஒன்றுமில்லை.  என்றும் அவர் நிலை ஒன்றே.  தம்மால் அருளப்பெற்ற அருணாசல  ஸ்துதியை அன்பர்கள் அறைக்கெதிரேயிருந்து பாடத் தொடங்கவும், பகவான் ஒருமுறை கண்ணைத் திறந்து முன்னே நோக்கினார்.  கண்களிலிருந்து ஆனந்த பாஷ்யம் பெருகியது.

சிறிது நேரத்தில் மூச்சின் இயக்கம் அமைதியாக நிற்க, உடலும் அசைவற அனைத்தின் இதயமாய் இடையறாது சுடரும் அகண்ட சிவஸ்வரூபமாம் தமதியல்பிலே பகவான் மறைப்பறத் தனித்து நின்றார்.

அந்நேரத்தில் பகவானுக்கு அருகிலிருந்தோரை ஒப்பில்லா ஓர் உயரமைதியொன்று சூழ்ந்து செறிந்து விளங்கியது. அணுக்கத் தொண்டரினுள்ளத்தே நினைப்பின் அலையோ உணர்ச்சியின் அலையோ எதுவும் எழவில்லை.  மஹாநிர்வாணத்தின் மோனப்பேரெழிலே சிறந்து விளங்கியது.

வெளியே காத்திருந்த பக்தர்களின் பெருங்குழாம் கட்டுக்கடங்காது பகவானிருக்கையை நோக்கி நெருங்கியது உணர்ச்சியின் எழுச்சியால் மாதர் சிலர் மூர்ச்சித்தனர்.  எல்லோரும் பரவசராயினர்.  அருணாசல சிவஸ்துதி ஆர்வப் பெருக்குடன் மேன்மேலுமோங்கியது.

பக்தர்கள் பகவானது திருமேனிக்குக் கற்பூரவொளி காட்டி, பத்மாசனத்திலிருத்தி, மலர்மாலைகள் சூட்டி, மாத்ருபூதேசுவரராலயத்தின் மஹா மண்டபத்தில் அமர்வித்தனர்.  அன்பர்களின் ஆர்வம் அன்றிரவு முழுவதும்  வேதகோஷமும் அருணாசல சிவ ஸ்துதியும் பகவத் ஸ்துதியமாகச் சேர்ந்து திரண்டு ஓயாதொலித்தது.  மறுநாள் தாயார் ஆலய, வடபுறம் திருச்சமாதி செய்விக்கப்பட்டது.  பின்னர் ஆலயம் அமைந்தது.