உபதேசங்கள்

ஆங்கிலம் படித்த சிலரும் பகவான் ரமணரின் விருபாட்ச குகை வாசகாலத்திலேயே அவரது மகிமையை உணர்ந்து அடிக்கடி தரிசனத்திற்கு வரத் தொடங்கினர்.  இவர்களுள் சிலர் சுவாமிகளைப் பற்றியும் எழுதிக் குறித்து வைத்துக் கொண்டனர்.  ஸ்ரீ கம்பீரம் சேஷய்யர் என்னும் பக்தரின் சந்தேகங்களுக்குச் சுவாமிகள் சிறு சீட்டுகளில் பதில் எழுதிக் கொடுப்பது வழக்கம்.  விசார சங்கிரகம் என்னும் நூல் இந்தக் குறிப்புகளைக் கொண்டு தொகுத்ததே யாகும்.

 

சிவப்பிரகாசம் பிள்ளை என்னும் பக்தர் சுவாமிகளின் உபதேசத்தைத் தொகுத்து எழுதியிருக்கிறார்.  அந்தக் காலத்திலேயே சுவாமிகளின் ஆத்ம ஞானோபதேசம் எவ்வளவு சிறந்து விளங்கியது என்பதை நானார்? என்னும் அந்நூலில் உள்ள கீழ்வரும் பாகங்கள் நிதரிசனமாகக் காட்டுகின்றன:

 

மனமற்ற நித்திரையில் தினம் அநுபவிக்கும் தன் சுபாவமான அந்தச் சுகத்தை அடையத் தன்னைத் தான் அறிதல் வேண்டும்.  அதற்கு, நானார்? என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.

 

நானார்? பஞ்சவிஷயங்களையும் அறிகின்ற ஞானேந்திரியங்கள் நானன்று.  கன்மேந்திரியங்களும் நானன்று.  சுவாஸாதி ஐந்து தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று.  மனமும் நானன்று.  விஷய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானன்று.  மேற்சொல்லிய யாவும்  நானல்ல, நானல்லவென்று நேதி செய்து தனித்து நிற்கும் அறிவே நான்.  அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்.

 

நானார் என்னும் விசாரணையினாலேயே மனம் அடங்கும். நானார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்துப் பிணம்சுடு தடிபோல் முடிவில் தானும் அழியும்.  (அப்போது) ஆத்ம ஞானமே திகழும்.

 

கணபதி முனிவர் மகா பண்டிதர் என்று புகழ் படைத்தவர்; பெரிய கவி; மஹாதபஸ்வி.  இவர் பல்லாண்டுகள் கடுந்தவம் புரிந்தும் கருதிய பலன் கைகூடாது  மனம் வருந்தி நின்றார்.  அதிருஷ்டவசமாக அன்று விருபாக்ஷ குகையின் முன்தாழ்வாரத்தில் சுவாமிகள் தனியே அமர்ந்திருந்தார்.  கணபதி முனிவர் சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்து தம் இரு கரங்களாலும் சுவாமிகளின் அடிகளைப் பற்றிக் கொண்டு, கற்ற வேண்டிய யாவற்றையும் கற்றேன்.  வேதாந்த சாஸ்திரங்களையும் பயின்றேன்.  மனங்கொண்ட மற்றும் மந்திரங்களையும் ஜபித்தேன்.  ஆனாலும் தபஸ் என்பது யாதெனத் தெரியவில்லை.  ஐயனே, உனது அடியினைச் சரணடைந்தேன் என்று இறைஞ்சினார்.

 

சுவாமிகள் கணபதி முனிவரை வெகு நேரம் கருணையுடன் நிச்சலமாகக் கூர்ந்து நோக்கி, இங்ஙனம் திருவாய் மலர்ந்தருளினார்.

 

நான், நான் என்பது எங்கேயிருந்து புறப்படுகின்றதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே லீனமாகும், அதுவே தபஸ்.

 

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணுங்கால், மந்திரத்துவனி எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே லீனமாகிறது. அது தான் தபஸ்.

இவ்வருள் வாக்கும் இத்திவ்விய உபதேச மொழிகளும் கணபதி முனிவரின் ஐயங்கள் யாவற்றையும் தீர்த்துவிட்டன.

குகையிலேயே அன்று இரவு வரை அவர் தங்கினார்.  பக்கத்தில் உள்ளவரிடமிருந்து சுவாமிகளின் பெயரைத் தெரிந்து கொண்டதும், பகவான் ஸ்ரீ ரமண மகர்ஷிகள் என்பதே சுவாமிக்குப் பொருத்தமான பெயர் என்று வெளியிட்டார்.

மகரிஷிகள் அருளிய விடைகளின் முக்கியமான பாகங்களை காவ்யகண்டர் தொகுத்து வடமொழி சுலோகங்களாக அமைத்து ஸ்ரீ ரமண கீதை என்னும் நூலாக இயற்றினார்.

 

அக்காலத்துப் பக்தர்களுள் திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை மேற்பார்வையாளராக இருந்த ராமஸ்வாமி ஐயர் என்பவரும் ஒருவர்.  பகவானது சந்நிதானத்துக்கு வந்த இரண்டாம் முறையே அவரது உள்ளத்தில் உணர்ச்சி பொங்கியது.  சாஷ்டாங்கமாக வீழ்ந்து வேண்டுவராயினர்.

 

சுவாமி! ஏசுநாதர் போன்ற மகான்கள் பாவிகளைக் கரையேற்றவே இவ் வுலகில் தோன்றினர்.  எளியேனுக்கும் கடைத்தேற வழியில்லையா? உய்வில்லையா? என்று அவர் ஆங்கிலத்தில் வினவியதற்கு, ஆமாம் உய்வுண்டு, வழியுண்டு என்று ஆங்கிலத்திலேயே விடை கிடைத்தது.

எச்சம்மாள் மிகவும் பரிதாபகரமான நிலையில் ஸ்ரீ மகரிஷிகளைப் பற்றிக் கேள்வியுற்று திருவண்ணாமலையை அடைந்து, மலை மீதிருந்த பகவானைத் தரிசித்தார்.  அவர் அசையாது வீற்றிருந்தார்.  எச்சம்மாளும் நின்ற இடத்திலேயே அசையாது ஒரு மணி நேரம் நின்றார்.  வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.  ஆனால் இம் மெளனதரிசனம் அவரது எண்ணங்களில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியது.  மகரிஷிகளின் அருளால் தம் துயர் எல்லாம் மறைந்து விட்டதாகத் தன்னுடன் வந்தவர்களிடம் மகிழ்வுடன் தெரிவித்தார்.

 

அன்று முதல் எச்சம்மாள் திருவண்ணாமலையையே தமது இருப்பிடமாகக் கொண்டார்.  தாம் அங்கே இருந்த முப்பது வருடங்களுக்கு அதிகமாகவே – முதலில் மகரிஷிகளுக்கு உணவு அளிக்காமல் இவ்வம்மை சாப்பிடுவதில்லை.

 

முதல் மேல் நாட்டு பக்தர்:

 

ஐரோப்பியர்களில் முதன்முதலாக மகர்ஷிகளை நாடிவந்தவர் எப்.எச். ஹம்ப்ரீஸ் என்பவரே.  1911-ஆம் ஆண்டு முதல் போலீஸ் இலாகாவில் வேலை பார்த்த போதிலும் மிகுந்த மதப் பற்றுள்ளவர்.  பூர்வ ஜென்மத்தில் தாம் ஒரு சித்த கோஷ்டியில் சேர்ந்திருந்ததாக இவருக்கு ஓர் நம்பிக்கை.

ஹம்ப்ரீஸ் ஸ்ரீ மகர்ஷிகளை மும்முறை சந்தித்து, நடந்த சம்பாஷணைகளை எழுதி இங்கிலாந்தில் உள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்பினார்.  இண்டர்நேஷனல் ஸைக்கிக் கெஜட் என்ற பத்திரிகையில் அவை பிரசுரமாயின.

அதன் பின் சில ஆண்டுகளுக்குள்ளாகவே ஹம்ப்ரீஸ் தமது வேலையை ராஜீனாமா செய்து கத்தோலிக்க சந்நியாசி ஆனார்.  முற்கூறிய சம்பாஷணைகளிலுள்ள சில பாகங்களைக் கீழே காணலாம்.

 

ஹம்ப்ரீஸ்: உலகுக்கு நான் ஏதாவது உதவி செய்யக்கூடுமா?

மகர்ஷி: முதலில் உனக்கு நீ உதவி செய்து கொள்; அதன் மூலம் உலகுக்கே உதவி உண்டு.

ஹம்ப்ரீஸ்: உலகுக்கு உதவி செய்ய நான் விரும்புகிறேன்; செய்யலாம் அல்லவா?

மகர்ஷி: ஆகா, செய்யலாம்; உனக்கு உதவிசெய்து கொள்வதன் மூலம் உலகுக்கே உதவி செய்தவன் ஆகிறாய்.  நீ இருப்பது உலகில்தானே? நீ தான் உலகு.  உலகத்தினின்றும் நீ வேறு அல்ல; உலகமும் உன்னினின்று வேறுபட்டது அன்று.

ஹம்ப்ரீஸ்: பெரியோய்! பூர்வம் ஸ்ரீ கிருஷ்ணன், ஏசு போன்றோர் பல அற்புதங்களைச் செய்தனர்; நாமும் அவ்வாறு செய்ய முடியாதா?

மகர்ஷி: அவ்வற்புதங்கள் நிகழ்ந்த போது அவர்களுள் யாராவது இயற்கைக்கு மாறுபட்ட ஆச்சரியங்ளைச் செய்கிறோம் என்று உணர்ந்தனரா?

ஹம்ப்ரீஸ்: (சிறிது யோசனைக்குப் பின்) இல்லை.

சித்தி விளையாட்டுக்களில் ஆசை கொண்டு மோசம் போகாமல் ஆத்ம விசாரத்தின் மூலம் முக்தி அடையும் மார்க்கத்தைத் தேடுமாறு மகரிஷிகள் அவருக்கு உபதேசித்தருளினார்.