தனிமையான ஒர் இடத்தை நாடி கோயிலிலே பாதாளலிங்கம் என்ற ஒர் இருட்டுக் குகையை தேர்ந்து எடுத்து ஏகாந்த நிஷ்டானுபூதியில் ஆழ்ந்தார். முற்காலத்தே வால்மீகி முனிவர் தம்மைச் சுற்றிலும் கறையான் புற்றுக்கள் எழுந்து மூடிக் கொண்டதையும் உணராது வருடக் கணக்காக நிஷ்டானுபூதியில் இருந்ததாகக் கூறுவர். பாலயோகியின் நிஷ்டானுபூதிநிலை அதை ஒத்திருந்தது. பின்னர் சுப்ரமணியர் கோயிலருகே சிலகாலம்; அதன் பக்கத்தில் உள்ள பூந்தோட்டத்தில் சில தினங்கள்; பின்னர் வாகன மண்டபத்தில் சில தினங்கள்; அதன்பின் அன்பர் ஒருவன் வேண்டுகோளுக்கு இசைந்து திருவண்ணாமலைக்கு அருகே உள்ள குருமூர்த்தத்தை அடைந்து ஒன்றரை வருடகாலம் அங்கே சமாதி நிஷ்டையில் இருந்தார்.

இவ்விவரங்கள் விரைவில் ஊரெங்கும் பரவி மதுரைக்கும் எட்டி விட்டது. மூத்த பிள்ளை நாகசாமியுடன் தாயும் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அப்போது பவழக்குன்றில் உள்ள ஒரு பாறையின்மீது சுவாமி படுத்திருந்தார். அண்ணனும் அம்மையும் சுவாமியை அடுத்து விடாப்பிடியாக வேண்டினர். அவர் மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றனர். அன்னையின் அன்பு முழுவதும் வெளிப்பட்டது. அழுதார், அரற்றினார், வேண்டினார், இறைஞ்சினார். ஒன்றும் பலிக்கவில்லை. எதற்கும் ஒரே நிச்சலமான மெளனம்!

பக்கத்தில் உள்ளவர்களுக்கு அது மகாபதாபக் காட்சியாக இருந்தது. தாயின் அன்பு அவர்கள் மனத்தைக் கரைத்தது. பெற்றெடுத்த தாய்க்கு மறுமொழியாவது கொடுக்கும்படி அவர்களும் சேர்ந்து மன்றாடினார்கள். கடைசியில் சுவாமி ஒரு காகிதத்தில் பின்வருமாறு எழுதிக் கொடுத்தார்.

‘அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மெளனமாயிருக்கை நன்று.’

அதன்பின் சுவாமிகள் மலைமேல் பல குகைகளில் மாறி மாறித் தங்கி வந்தார். விரூபாக்ஷ குகையில் இருந்தார்.

விரூபாக்ஷ குகையில் இருந்தபோது, பக்திரசம் ததும்பும், ‘அருணாசல அக்ஷரமணமாலையி என்னும் துதியை அவர் அருளினார். சுவாமிகளை அடுத்துள்ள அடியார்கள் பிகை்ஷக்காக ஊருக்குள் செல்லும்போதெல்லாம் இப்பாடல்களைப் பாடி வரலாயினர்.

முதல் வருகையிலேயே மகர்ஷிகள் தமது அன்னையிடம் உலகியல் பாசம் அற்றுவிட்டதென அறிவித்துவிட்ட போதிலும், அவ்வம்மையார் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து போய்க் கொண்டிருந்தவர் பின் நிரந்தரமாய் வந்து தங்கலானார்.

சற்று விசாலமான ஸ்கந்தாசிரமத்தில் பகவான் வசிக்கத் தொடங்கிய பின் அன்னை சமையல் கைங்கயத்தைத் தாமே மேற்கொண்டு தசனத்திக்கு வந்த பக்தர்களுக்கும் அன்னமிடலானார்.

அதிதிகள் அனைவருக்கும் அன்னமளிக்கும் வழக்கம் இதன் பின்னரே ஆச்ரமத்தில் ஏற்பட்டது.  நாளுக்கு நாள் பக்தர்களின் தொகை அதிகத்துக் கொண்டே வந்த போதிலும் இவ்வழக்கம் இன்றும் குறைவில்லாமல் நடந்து வருகிறது.  சிறிது காலத்திற்கு பின் அன்னையின் விருப்பத்திற்கு இணங்க, கடைசி குமாரரும் துறவியாகி ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்.

அழகம்மாளின் அந்திம காலத்தின் ஆறு வருடங்கள் அமைதியாகக் கழிந்தன. முடிவு நெருங்க நெருங்க, அன்னையும் பகவானிடம் பூரண நம்பிக்கை வைத்து அனைத்தையும் தத்தம் செய்துவிட்டதால், மகர்ஷிகளே பக்கத்திலிருந்து அவருக்கு பூர்ணமான ஞானத்தைப் புகட்ட முடிந்தது.

நோய்வாய்ப் பட்டிருந்த அன்னைக்கு 1922 -ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் இறுதி நாளாயிற்று. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும் அன்னையின் மார்பில் வலது கையையும் தலையில் இடது கையையும் வைத்துக் கொண்டு பகவான் நாள் முழுவதும் கண்கொட்டாமல் உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அன்னையின் பிராணன் இருதயத்தில் ஒடுங்கியது; அதாவது முக்தியுற்றது.

மறுநாள் காலையில் சமாதிக் கியைகள் தொடங்கின.  உறவினர்கள் வந்தனர்.  ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து கூடினர். பகவானும் அவர்களுள் ஒருவர் போலவே தோன்றினர்.  அன்னையின் புனிதவுடலை மலைக்கு தனித்து உள்ள பாலிதீர்த்தம் என்னும் இடத்துக்கு அன்பர்கள் எடுத்துச் சென்றனர்.  பிரதர்ண வழிக்கு வடக்கே ஓர் இடத்தில் குழி செய்து, திருமேனியை அதனுள் இருத்தி விபூதி, கற்பூரம், உப்பு முதலியவற்றை மேலே குவித்தனர்.  அதன் மேல் சமாதி கட்டி மஹர்ஷிகளின் திருக்கரத்தால் அதன் மீது லிங்கம் ஸ்தாபித்தனர்.  மாத்ருபூதேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் அதற்கு இன்றும் சிறப்பாக பூஜை நடைபெற்று வருகின்றது.